‘புத்தகம்’ Posts

February 27th, 2012

sujatha: one more year later

18. இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று சொல்லலாமா?

ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்கு பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப்போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம், அவர் எழுதுவது இவருக்கு புரிகிறது. கதையின் எதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார்.

19. அதற்குக் கதை புரியவேண்டும் அல்லவா?

ஆம். கதை வாசகருக்கு புரியவேண்டியதை மிக முக்கியமாக கருதுபவன் நான்.

20. சிலர் புரியாமலேயே கதை எழுதுகிறார்களே?

அவர்களைப் —- — ——.

- சுஜாதா [சிறுகதை: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், 1998.] [தொகுப்பு: கடவுள்களின் பள்ளத்தாக்கு]


சில மாதங்களுக்குப்பின் மீண்டும் கலிஃபோர்னியா வருகிறேன். சின்ன வயதில் கேட்ட மூன்று நாட்டவர்கள் வானத்தில் பறக்கும்போதே தங்களது நாட்டைக் கண்டுபிடிக்கும் (அதாவது இந்தியாவைக் கிண்டலடிக்கும்) ஜோக்கைப்போல் கலிபோர்னியாவின்மேல் பறக்கும்போதே சிலிக்கான் வாசனை மூக்கைத் தொலைக்கிறது. ப்ளேனில் எல்லோரும் திடிரென்று #include என்றெல்லாம் ப்ரோக்ராம் உளறுகிறார்கள்.

விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் எப்போதும் படர்ந்திருக்கும் மேகத்தைக் கிழித்தபடி அதிவேகமாக நகர்ந்து சான் ஹொசே ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறது. ரோடெல்லாம் தங்கமும் வைடூரியமும் கிடைக்கும் என்று நினைத்தலாகாது. பொட்டைக் காடாக எல்லா இடத்திலும் வானம் தெரியும் பாலைவனமாக இருந்த இடத்தில் திடீரென்று ஒரு முப்பது வருடங்களில் உலகம்முழுவதிலும் இருந்து டெக்னாலஜி ப்ரஜைகள் வந்து அடைத்துக்கொண்டிருக்கும் ஓர் artificial சொர்க்கம். எங்கெங்கும் பணச் செழிப்பு தெரிகிறது. ரேச்சல் வெங்கடாசலம் என்றெல்லாம் பெயர்கள் காணக் கிடைக்கிறது. சரவணபவன் இருக்கிறது. தக்காளி ரசத்தை சூப் என்கிறார்கள். மினி டிபன் முதற்கொண்டு அடை அவியல், கைமா இட்லிவரை எல்லாம் கிடைக்கிறது. ஏப்பம் உள்பட. எந்தக் கம்பெனி போனாலும் வந்தாலும் இந்தியன் ஸ்டோர்கள் மாறுவதே இல்லை. காய்ந்துபோன டஜன் கறிவேப்பிலைகளை ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு டாலருக்கு விற்றுவிடுகிறார்கள்.

இங்கிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்தான் அமெரிக்காவிலேயே rudest நகரமாம். சாண்டா க்ளாராவில் பெல்ட் போடாத கார் ட்ரைவர்கள் வருகிறேன் வருகிறேன் என்று சித்த ஞாழி காக்கவிட்டு 101 ஹைவேயில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்களுடன் மல்லுக்கட்டி ப்ளேனை எடுக்கும்முன் எப்படியோ கொண்டுவந்து போட்டுவிடுகிறார்கள்.

0000

போன வருடம் படித்த ஆங்கில வரிசையில் எனக்குப் பிடித்த புத்தகம் பில் ப்ரைசன் (Bill Bryson) எழுதிய At Home – A Short History of Private Life என்ற புத்தகம். பில் ப்ரைசன் ஓர் ஆதர்ச எழுத்தாளர். படிக்கும் ஒவ்வொருவரிடமும் 1-1 பேசுகிறமாதிரி எழுதக்கூடியவர். ப்ரபஞ்சத்தில் இருந்து பெருவெடிப்பு, கல் மனிதன் எனக் கடினமான விஷயங்களை A Short history of nearly everythingல் விளக்கியிருப்பவர். ஓவ்வொரு புத்தகத்திலும் புதியவைகளைமட்டுமே எழுதக்கூடியவர்.

ஐம்பதுகளில் இருந்த அமெரிக்காவைப் பற்றி இவர் எழுதிய சுயசரிதையான The Life and Times of the Thunderbolt Kid எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஓரிரு அத்தியாயங்களை இரண்டு மூன்று முறைகூடப் படித்திருக்கிறேன். விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். ஓரிருவருக்குப் பிறந்தநாள் பரிசாக இந்தப் புத்தகத்தை அளித்திருக்கிறேன்.படித்தால் உங்களின் குழந்தைப் பருவத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பீர்கள். படித்தபடியே சிரிப்பு வரவில்லை என்றால் நீங்கள் டாக்டரை நாடவேண்டிவரலாம்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் ப்ரைசனின் வீட்டில் ஒரு நாள் எங்கிருந்தோ தண்ணீர் ஒழுகுகிறது. அவர் ஆட்டிக்(Attic) என்னும் வீட்டின் உட்கூரையின்மேலிருக்கும் அறையில் ஏறிப் பார்க்கிறார். முதன்முறையாக அந்த அறைக்கு வரும் அவருக்குத் தோன்றுவது, உலகத்தைப் பற்றியெல்லாம் பேசும் எனக்கு என் வீட்டைப் பற்றியே தெரியாத விஷயங்கள் எத்தனை இருக்கிறது!

இதையடுத்து அவர் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வோர் அறையாக நம்மை அழைத்துச்செல்கிறார். அந்த அறையின் பின்னணியில் இருக்கும் வரலாறை ஆராய்ந்து விளக்குகிறார். இப்படி உருவானதுதான் இந்தப் புத்தகம் At Home – A Short History of Private Life.

டைனிங் டேபிளில் ஏன் உப்பும் மிளகும்மட்டும் வைக்கிறார்கள், forkல் ஏன் நான்கு பற்கள்மட்டும் இருக்கிறது, பாத்ரூம் உருவானது எப்படி எனச் சுவாரசியமான, ஆனால் அதிகம் பிரசித்தம் இல்லாத விஷயங்களை ஆராய்கிறார். ப்ரசன் சொல்லவருவது உங்கள் வீட்டிற்கும் வரலாறுக்கும் சம்பந்தமில்லை என நினைக்காதீர்கள். வரலாறு கடைசியாக முடிவது வீட்டில்தான்!

ரோமானியர்கள்தான் குளியலறைப் பழக்கத்தைக் கொண்டுவந்தார்கள். அதற்குமுன் கிரேக்கர்கள் Gymnasium என்றோர் இடத்தை வைத்திருந்தார்கள். Gymnasium என்றால் ’ஆடையில்லாத அறை’ என்று அர்த்தம். கொஞ்சம் உடலை வியர்க்கவிட்டுவிட்டுக் குளித்த இடம்தான் அது. அவர்களோடு ஒப்பிடும்போது ரோமானியர்கள் கொஞ்சம் சொகுசானவர்கள். அவர்கள் குளியறை பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்தது. அதனுள் சலூன், நூலகம், ப்யூட்டி பார்லர், டென்னிஸ் கோர்ட், ரெட் லைட் ஏரியா என்று பலதும் இருந்ததாம். நகரத்தில் நடுவில் இருந்த இந்தக் காமென் குளியலறைதான் அவர்களின் டைம் பாஸ். கொடுத்துவைத்தவர்கள்!

ரொம்பவும் அபாயகரமான அறை அல்லது இடம் மாடிப்படிதான். அமெரிக்காவில் வருடத்திற்குப் பன்னிரெண்டாயிரம் பேர் கீழே விழுகிறார்கள். மீண்டும் எழுவதே இல்லை. அவர்கள் விழுவது படிகட்டிலா, மொட்டை மாடியிலிருந்தா, அல்லது மரக் கிளையிலிருந்தா எனத் தெரிவதில்லை. இங்கிலாந்தில் வருடத்திற்குச் சுமார் மூன்று லட்சம் பேர் படிகட்டிலிருந்து விழுந்து டாக்டர் க்ளினிக் செல்கிறார்கள். இந்த மாடிப் படி பற்றியே MIT ப்ரொஃபஸர் ஒருவர் ஆராய்ச்சி செய்திருக்கிறார். இதன்படி இந்த நம்பர்கள் ரொம்பவே குறைந்தவை என்கிறார் அவர். கார் விபத்திற்கு அடுத்தபடி அதிகமாக நடக்கும் விபத்து இந்த மாடிப்படிச் சறுக்கல்தான்.
ஆனாலும் மற்ற இடங்களுக்குச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாடிப்படிகளுக்குச் செய்யப்படுவதில்லை என்பதுதான் சோகமே. நியுயார்க்கில் ஒரு
சப்வேயில் சறுக்காமல் இருக்கப் போடப்பட்டிருந்த ரப்பர் படிகட்டுகள் எங்கு ஆரம்பிக்கின்றன என்று தெளிவாக தெரியவில்லை. அதனால் சுமார் ஆறு வாரங்களில் 1400 பேர் விழுந்துவிட்டிருந்தார்கள். அப்புறம் அதை விழுந்தடித்துக்(!)கொண்டு மாற்றினார்கள்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஏதாவது தருணத்தில் மாடிப்படியில் இருந்து சறுக்கி விழுகிறார்கள். 2,222 முறைகளில் ஒரு முறையாவது கண்டிப்பாக நீங்கள் ஒரு படியாவது தவறுவீர்களாம். 63,000 முறைகளில் ஒரு முறையாவது ஒரு சின்ன விபத்தாவது நேருகிறதாம். முப்பது லட்சம் முறைகளில் ஒரு முறையாவது ஹாஸ்பிட்டலுக்கு செல்ல நேர்கிறதாம். திருமணமாகாதவர்களும் கொஞ்சம் ஒல்லியானவர்களும் அதிகம் விழுகிறார்களாம். ஒருமுறை சறுக்கினீர்கள் என்றால் மீண்டும் சறுக்கும் வாய்ப்பு அதிகமாகிறதாம். ஏறுவதைவிட இறங்கும்போதுதான் விபத்துகள் அதிகம் நடக்கிறதாம். நல்ல ஆரய்ச்சி, ந.ப.

இப்படிக் கீழே விழுவதை ஒரு ஸ்லோ-மோஷனில் ஓட்டிப் பார்க்கலாம். படிகட்டில் இறங்குவதே ஒருவிதக் கீழே விழுதல்தான். என்ன, நாம் கொஞ்சம் கண்ட்ரோலில் இருக்கிறோம். ஆகவே விழாமல் இறங்குகிறோம். சட்டென அடுத்த படி சறுக்கிவிட்டால் இந்த மனிதன் இறங்கவில்லை, சறுக்க ஆரம்பித்திருக்கிறான் என மூளைக்குப் புரிந்து உங்கள் ரிஃப்ளக்ஸ் இயக்கத்தில் இறங்க ஆகும் நேரம் 190 மில்லி செகண்டுகள். இந்தப் பூதாகர இடைவெளியில் நீங்கள் சரியாக ஏழு இஞ்ச்கள் இறங்கியிருப்பீர்கள். விழலாம், அல்லது விழாமல் சுதாரித்துக்கொண்டும்விடலாம்.

இப்படியான மாடிப்படியில் அதிகம் கவனமாக இருக்கவேண்டிய இடம் முதலும் முடிவும்தான். மூன்றில் ஒரு விபத்து முதல் படியிலோ கடைசிப் படியிலோ நடக்கிறது. மிச்ச இரண்டு பங்குகள் முதல் மூன்று படிகளிலோ கடைசி மூன்று படிகளிலோ நடக்கிறது. ஆக நடுவில் மோட்டு வளையத்தை பார்த்தபடி நடக்கலாம். திடிரென்று ஒரு படி இருக்கக்கூடிய இடங்களும் நான்குக்கும் குறைவான படிகள் இருக்கக்கூடிய பிரதேசங்களிலும் அஜாக்கிரதை அதிகம் இருக்கிறது.
பெட்ரூம் பற்றிக்கூடச் சுவாரசியமான பல குறிப்புகள் இருக்கின்றன. எஜமானர்கள் தூங்கும் படுக்கைகளின் கால் பகுதியில் வேலைக்காரர்கள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். மன்னர் ஐந்தாம் ஹென்றி அவர் மனைவியுடன் கூடியபோது அவருடைய சமையல்காரரும் வேலைக்காரரும் உடன் இருந்ததாகத் தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. படுக்கையின் மேல் திரைச்சீலை ஒன்று இருந்திருக்கலாம் என்று சந்தேகத்துடன் எழுதிய குறிப்பும் மங்கலாக இருக்கிறது

0000


வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’ சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 – The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 – At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப், கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ, வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி – Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் – மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு


சினிமாவை நன்கு அறிந்தவர்கள் என்று நான் எண்ணும் சில நண்பர்கள் கூட அவ்வப்போது இயக்குநர் மணிரத்னத்தைத் திட்டித் தீர்ப்பதைப் பார்க்கிறேன். காரணத்தை அறிய முற்பட்டால், சென்ஷேனல் விஷயத்தை படத்துக்கு பின்புலமாக வைத்துக் கொண்டு, பணம் பண்ணி, விஷயத்துக்கு சரியான முடிவு சொல்லாமல் எஸ்கேப் ஆகிறார் என்பது தான். மணி செய்த விஷயங்களை மறந்து போய்த் தாக்குகிறார்கள். அவர்தான் சினிமாவில் மகேந்திரன் ஆரம்பித்து வைத்த ஸட்டிலிடியை தொடர்ந்தார்.

கதை எழுதுவது ஒரு கதாசிரியனின் உரிமை. அவனுடையது மட்டுமே. அதை அவன் எங்கே வேண்டுமானாலும் நடக்கிற மாதிரி எழுதலாம். மகாபாரதத்தில் எஸ்.வி சேகர் போய் மாட்டிக் கொள்கிற நாடகம் மாதிரி, சுவாரசியமான பின்புலங்களில் கதைச்சத்து அதிகமில்லாத கதையைச் சொல்லலாம். அது கதைக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கும். இதைத் தான் மணி ஒவ்வொரு படத்திலும் செய்கிறார். பிள்ளையைப் பரிகொடுக்கும் தாயின் சோகத்தை சொல்லும் கதையில் அவர் இலங்கையைப் பின்புலமாக வைத்தால், அவர் அந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்ல வேண்டும் என்பது எந்த நியாயம். அப்படி சொல்பவர்களெல்லாம் என்றைக்காவது அரசியல்வாதியின் வீட்டுக் கதைவைத் தட்டி பிரச்னைக்கு முடிவு தேடுங்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் மணி ரத்னம் மட்டும் காஷ்மீர் என்று சொல்லி விட்டால், யூ.என் தலைவர் போல் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்பது கையாலாகாத்தனம்.

படம் பிடிக்கவில்லை என்றால் இனியொரு முறை அதைப் பார்க்காமல் இருக்கலாம், அல்லது மற்றவர்களிடம் அதைப் பற்றிச் சொல்லலாம், அதை விடுத்து கதாசிரியன் இதைச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்வது அவனது உரிமைகளில் தலையிடுவது போல்.

நான் சமீபத்தில் எழுத நினைத்திருக்கும் ஒரு கதை நடப்பது, மான்ஹாட்டன் நகரத்தில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு லிவ்-இன் ஜோடியைப் பற்றியது. ஒரு நாள் முன்னிரவில் நடக்கும் அந்தக் கதையில், அந்த ஆண் தனக்கும் மற்றொரு பெண்ணிற்கும் இருக்கும் ரகசிய உறவை அன்று சொல்லிவிடுவது என்று இரண்டு நாட்களாக நினைத்திருக்கிறான். அவன் காதலியோ தன்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கத் தயராய் இருக்கிறாள்.

அன்று காலை நடக்கும் ஒரு சம்பவம் இருவரின் வாயையும் அடைத்து விடுகிறது. அன்று சாயந்திரம் இருவரும் சமைத்து சாப்பிட்டு விட்டு பால்கனியில் சென்று அமர்கிறார்கள். இருவருக்கும் இடையேயும் ஒரு மயான அமைதி நிலவுகிறது. தூரத்தில் பெரும் கரும்புகை தெரிகிறது. டி,வியில் நியூஸ் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலேறும் புகையைப் பார்த்திருக்க அமர்ந்திருப்பவர்கள் கொஞ்ச நேரத்தில் கட்டிக் கொள்கிறார்கள். ஏதும் பேசாமல் அந்தப் புகை அவர்களை ஒன்று சேர்த்து வைக்கிறது.

அந்தப் புகையின் காரணம் 9/11 என்று புரிந்திருக்கலாம். இப்படி ஒரு கதை எழுதுபவனை, ”9/11க்கு ஒரு முடிவு சொல்லி விட்டுப் போ, இல்லாவிட்டால் கதை வேஸ்டுமா” என்றால் எப்படியோ அப்படித்தான் மணிரத்ன விஷயமும். யோசித்து பாருங்கள்.

0000

கதையைப் பற்றிப் பேசும்போது, தற்போதெல்லாம் நல்ல தமிழ்க் கதை வருவதேயில்லை என்று சொல்லிக் கொள்ளும் வாசகர்களுடன்(விமர்சகர்களுடன் அல்ல) நானும் சேர்ந்து கொள்கிறேன். கிட்டத்தட்ட உண்மை தான். என்ன தான் இலக்கியம்,கலை, ரசனை என்றெல்லாம் ரொமாண்டிக்காகக் கனவு கண்டாலும் இது ஒரு மாதிரி டிமாண்ட்/சப்ளைகளுக்கு உட்பட்ட மார்க்கெட் தான். விகடனும், குமுதமும், கல்கியும், குங்குமமும் எல்லாமே ஒரு மாதிரி கதைகளைத் தான் தேர்வு செய்கின்றன. அதிக வித்தியாசமில்லை. எல்லா மாகஸின்களிலும் அவ்வப்போது நல்ல கதைகள் வருகின்றன. கழுகு போல் வாராவாரம் காத்திருக்க வாசகர்கள் ரெடியில்லை என்பதுதான் உண்மை. தேவை – சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் 2010 என்ற தொகுப்பு. பல நூறு கதைகளைப் படித்து சிறந்த 25 கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர நான் ரெடி.

இதற்கு நடுவே இலக்கிய சர்ச்சைகள் என்ற கொசுத் தொல்லைகள் நல்ல கதைகள் வருவதைத் தவிர்க்கின்றன. பக்கம் பக்கமாகத் திட்டித் தீர்க்கிறார்கள், ஆளுக்கு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். இந்த விமர்சகர்களைப் படித்து யாரும் எந்தப் புத்தகத்தையோ படித்ததாகவோ, கிழித்ததாகவோ வரலாறு இல்லை. எல்லோரும் அவர்களுக்கு தேவையானதைப் படிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள். இதை மேதைவிலாச விமர்சகர்கள் புரிந்து கொண்டாலே உலக ஷேமம். இந்த இலக்கிய குஸ்தியில் தற்போது கூட்டத்துக்கு ஆள் சேர்பது போன்ற அரசியல் தந்திரங்கள் வந்து விட்டன. இனி லாரிகளும் பிரியாணி பொட்டலங்களும் தான் பாக்கி. நமக்கும் இவ்வித கிறுக்குத்தனங்கள் புரிவதால், இந்த வருடத்துடன் இவர்களின் போஸ்ட்-மாடர்னிஸ புல்ஷிட்டுகளை ஸ்டாப் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

0000

இந்த வருடம் நான் படித்த சிறந்த தமிழ்ப் புத்தமாக நான் நினைப்பது – சீனா – விலகும் திரை. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பல்லவி ஐயர். தமிழில் மொழி பெயர்த்தவர் ராமன் ராஜா. போன வருட புத்தக சந்தையில் வாங்கிய இந்தப் புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தது ஒரு பிரபலம். சியாட்டலில் தரையிரங்கும் முன் படித்து முடித்து விட்டேன்.

தன் காதலனுடன் சீனாவிற்கு வேலைக்காகச் செல்லும் பல்லவி ஐயர், சீனாவில் வாழ்ந்த அந்த ஐந்தாண்டுகளின் கதை. இரண்டு முக்கியமான விஷயங்கள், சீனாவைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் படித்திருந்தாலும், இதில் புதிதாகப் பட்டது பல்லவி என்னும் அந்த ஆங்கில ஆசிரியை/நிருபரின் பார்வை. எதைத் தேர்ந்தெடுத்து சொல்வது என்பதில் அவர் காட்டியிருக்கக் கூடிய தேர்ச்சி. இரண்டாவது, அதை அவர் சொன்ன விதம், பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள். மிதமான நகைச்சுவை.

இரண்டாவது காரணத்தைத் தான் சந்தேகமாக பார்க்கிறேன். இந்த வார்த்தைகளை இப்படி சரளமாக மிகச் சரியாக வந்து விழுந்ததற்கு காரணம் பல்லவியா ராமன் ராஜாவா? என்னவாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பைப் படிக்கவில்லை. படிக்கிற எண்ணமுமில்லை. காரணம், தமிழாக்கத்தில் ஒரு பிரமாதமான உதாரணம் இந்தப் புத்தகம். காரணம் மிகச் சரளமான நடை. ஆனால் எனக்கு முக்கியமாகப் பட்டது ரா.ராஜாவின் வொக்காபுலேரி. ராமன் ராஜா கண்டிப்பாக ஒரு revelation.

00000

வருட ஆரம்பத்தில் எடுக்கப்படும் ரெசல்யூஷன்களைப் பற்றி கொஞ்சம் சினிகலாகவே பார்க்கிறோம். ஜனவரி 2ம் தேதி எல்லோரும் ஜிம்மில் ஓட 7ம் தேதி அந்தக் கூட்டம் பாதியாக மாற, 15ம் தேதிக்குள் எல்லாவற்றையும் அடுத்த வருட ஆரம்பத்திற்கு மூட்டை கட்டி வைத்து விட்டு சக்கரைப் பொங்கலால் தொந்தி வளர்க்கிறார்கள். இது உண்மை தான்.

ஆனால் சின்னச் சின்னதாய் முடிவுகள் எடுத்தால் நிறைவேற்ற முடியும் என்று நினைக்கிறேன். இனிமேல் மோர் சாதத்திற்கு உப்பு போட்டு சாப்பிடப் போவதில்லை, தலைக்கு தலைகாணி வைத்துக் கொள்வதில்லை, ஜீன்ஸானாலும் கசக்கிக் கட்டு, நாளுக்கு 10 பக்கம் படிப்பது போன்ற விஷயங்கள் உருப்படியானவை. நாளையிலிருந்து சீரியல் பார்க்கப் போவதில்லை, நோ ஆபீஸ் பாலிடிக்ஸ் போன்றவைகள் பயங்கரம். நடக்காது.

இவைகளுக்கு நடுவே ஒரு ஸ்வீட் ஸ்பாட் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் எத்தனை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று கணக்கெடுப்பது, ஏப்ரலுக்குள் அட்லீஸ்ட் ஒரு பயிற்சி வகுப்பிற்காகவாவது போவது, பிறந்த நாளுக்கு முன் தேவையில்லாத டஜன் சுடிதார்களை தேவையானவர்களுக்கு கொடுப்பது போன்ற மைல்கற்கள் உடைய முடிவுகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முடிவுகளை உடனே ஃபேஸ்புக்கில் ஏற்றிவிடாமல், இவை முடியும் என மனதால் நம்புவது நல்லது.

இந்த மனதால் நம்புவது என்பது பற்றி ஒரு ஆயிரம் வார்த்தைகளில் எழுத முடியும். ஆனால் ஒரு முடிவு எடுக்கும் போது சற்றே உற்று நோக்கினால் அது நல்லதா கெட்டதா என்பது கிட்டத்தட்ட தெரிந்து விடும். இங்கே கொடுக்கப் பட்டிருக்கும் பூவா தலையா போட்டோவைப் போலத்தான்.

ஆகவே வருட ஆரம்பத்தில் நீங்கள் பெரும் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. பெரும் முடிவுகளுக்கு வருட ஆரம்பங்கள் ரொம்ப தூரம் என நினைக்கிறேன். நீங்கள் அர்விந்த் அடிகா ஆக வேண்டும் என்றாலும், ஐஸ்வர்யா ராய் ஆக வேண்டும் என்றாலும் உடனே நினைக்க ஆரம்பிக்கலாம். யோசித்துப் பார்த்தால் அடுத்த ஐஸ்வர்யா ராய் எங்கோ மூக்கொழுக விளையாடிக் கொண்டிருக்கிறாள். அடுத்த சல்மான் ரஷ்டி, எங்கேயோ புஷ்டியாக சாப்பிட்டுவிட்டு டின்- டின் படித்துக் கொண்டிருக்கிறான்.

இதற்கு மேல் சொன்னால் ஆசிரியர், இந்தப் பத்தி எதோ சுய-முயற்சிப் பயிற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று நினைத்து கத்திரி போட்டுவிடுவார் என்பதால் இத்துடன் நிறுத்…

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.


போன வார தமிழ் பேப்பரில் வெளியான இன்ன பிற பத்தி.

முதலில் ஒரு அரேபிய சிறு-சிறுகதை, அதற்கு முன் ஒரு கேள்வி. ஒரே ஒரு நாவலில் உலகப்புகழ் பெற்ற Harper Lee என்னும் பெண் எழுத்தாளரைத் தெரிந்திருக்கலாம். அவரின் ஒரே நாவலான To Kill a Mocking Bird-ஐ நீங்கள் படித்திருக்கக்கூடும். அவருக்கு முன்னமே ஒரே-நாவல் பெண் பிரபலம் ஒருவர் இருந்தார். யார்?

பாக்தாத் நகரில் வசித்துவந்த ஒரு சுல்தான் அவரது வேலைக்காரர்களில் ஒருவனை காய்கறிகள் வாங்கிவர மார்க்கெட்டுக்கு அனுப்பினார். போன சிறிது நேரத்தில் திரும்பிவந்த வேலையாள் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தான், “சுல்தான், மார்க்கெட் கூட்டத்தில் ஒரு பெண் என்னை நெருக்கித் தள்ளினாள். அவள் யார் என்று திரும்பிப் பார்த்தால் சாவு தேவதை. அவள் என்னைப் பயமுறுத்துகிறமாதிரி பார்த்தவுடன் ஓட்டமாக வந்துவிட்டேன். நீங்கள் தயவுசெய்து உங்களுடைய குதிரை ஒன்றைக் கொடுத்தால், என் விதியைத் தவிர்க்க, இந்நகரத்தை விட்டுப் போய்விடுகிறேன். சமாராவுக்குப் போய்விட்டால் சாவு தேவதை என்னைக் கண்டுபிடிக்க இயலாது.” சுல்தானும் அவனுக்கு மனமிரங்கி குதிரையைத் தர, முடிந்த அளவுக்கு வேகமாகக் குதிரையை முட்டித் தள்ளி ஓட்டிக்கொண்டு போய்விட்டான் வேலைக்காரன்.

அவன் சென்றவுடன் சுல்தான் மார்கெட்டுக்கு வந்து சேர்ந்தபோதுதான், கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். “காலையில் என் வேலையாளை எதற்காக பயமுறுத்தும் பார்வை பார்த்தாய்?”

“ஐயோ அது பயமுறுத்தும் பார்வை இல்லையே, ஆச்சரியமான பார்வை. அவனை பாக்தாதில் பார்த்ததில் எனக்கோ வியப்பு. இன்றிரவு சமாராவில் அல்லவா அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு” என்றேன்.

இந்தக் கதையை இயற்றியவர் பெயர் தெரியாது. ஆனால் இத்தனை குறைவான வாக்கியங்களில் என்ன ஒரு பிரமாதமான கதை. இந்தக் கதையை ஜெஃப்ரி ஆர்ச்சர் முதற்கொண்டு சிறு-சிறு கதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் எடுத்துக் காட்டிவிட்டார்கள். தமிழில் இவ்வாறான, சுஜாதா சொன்னதுபோல, சி.சி கதைகள் வருவதே இல்லை. வாராந்திரிகளில் வரும் ஒரு பக்கக் கதையை எதிலுமே சேர்த்துக்கொள்ளக்கூடாது.

சி.சி.கதைகளை Flash Fiction அல்லது Micro Fiction என்கிறார்கள். அவற்றை எழுத, சில எழுதப்படா விதிமுறைகள் உண்டு. கதையை கதை முடியும்போது ஆரம்பித்தல் அவசியம். அதாவது ‘கடைசியில் கதையில் நுழை, சீக்கிரமாக வெளியேறு’ என்னும் விதி. கடைசி வரி அதிர்ச்சி முக்கியம். கண்டிப்பாக ஒரே ஒரு நிகழ்வுத் தொடர்பாக இருத்தல் வேண்டும். சிறுவனாக இருப்பதில் ஆரம்பித்து ஹீரோயினை மணம் செய்யும் வரையில் 5 வரிகளில் சொன்னாலும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது. சுவாரஸ்யமான கதைக்களன் ஒரு ப்ளஸ். ஒரு போர் நடக்கும் தெருவிலோ, அன்னிய உலகின் ஒரு சூரிய அஸ்தமனத்திலோ கதை நடக்கலாம். நல்ல சிறுகதைகள் என்றுமே மறக்கப்படுவதில்லை. இன்றைக்கு இருக்கும் கவனக் கலைப்புகளுக்கு நடுவே வாசகரைப் படிக்கவைக்க இம்மாதிரி சி.சி.கதைகள் தேவைப்படுகின்றன. Kurt Vonnegut சொன்னமாதிரி, “Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.”
அன்பர்கள் பெஞ்சு நாற்காலிகளை விட்டெறியாத பட்சத்தில் குறிப்பெடுத்து வைத்திருக்கும் சி.சி.கதைகளை இங்கே எழுதுகிறேன்.

oo0000oo

இ-புத்தகங்களின் விற்பனை அதிகமாயிருப்பதாகப் படித்தேன். கொஞ்ச நாட்களுக்குமுன்புவரை, ‘படித்தால் மாண்ட மரத்தின் பேப்பரில் ப்ரிண்ட் செய்யப்பட்டதை அன்றி வேறொன்றையும் படிப்பதாயில்லை’ என்று இருந்தவர்களும் கொஞ்சம் மாறியிருக்கிறார்கள். கிண்டில் போன்ற இயந்திர புத்தகப் படிப்பான்களை யூஸ் செய்தவுடன் திடீரென்று புத்தக ஆர்வம் பிய்த்துக்கொள்வதாக வேறு சொல்கிறார்கள். எப்படியோ இணைய/டிவி மேய்வதைக் காட்டிலும் இது ஷேமம்.

கிண்டிலின் விலை குறைந்து கட்டெறும்பாக ஆகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் யூஸ் அண்ட் த்ரோ இ-புத்தகங்கள் வந்துவிடும். கடைக்கு போய் ராணி வாங்குவதற்கு பதிலாக ராணி என்ற அட்டை போட்ட வஸ்துவை வாங்கித் திறந்து பார்த்தால் எல்சிடி திரையில் குருவியார் கேள்வி பதில் ஓடும். மூடி வைக்கும் முன் அடுத்த வார பி.டி.சாமி ராணி முத்துவுக்கு இ-ஆர்டர் கொடுத்துவிடலாம். பேப்பர்காரர் இ-பேப்பர்காரர் என்று மலையாள வாசனையுடன் அழைக்கப்படுவார்.

iPad போன்றவற்றுக்கும் Kindle வகையறாவுக்கும் ஆதாரமான வித்தியாசங்கள் இருக்கின்றன. iPad என்பது ஒரு கைக்கணினி. ஆகையால் இ-புத்தகத்தின் முன்னுரை படிக்குமுன் மெயில் செக் பண்ணப்போய் எதாவது facebook அக்கப்போரில் ஆஜராகி வெளிவரும் முன்னர் தூக்கம் வரலாம். கிண்டிலில் இவையெல்லாம் செய்ய முடியா. புத்தகம் அல்லது பேப்பர் மட்டுமே படிக்கமுடியும். ஆகையால் இணையத் தொல்லைகள் கம்மி.

இவையிரண்டின் ஆடியன்ஸும் வெவ்வேறு ஆசாமிகள். iPad-ன் இணையக் கடையில் மக்கள் அதிகமாக வாங்குவது, Angry Birds என்னும் ஒரு விளையாட்டு. பன்றிகள் தங்களின் முட்டைகளை தூக்கிக்கொண்டு போய்விட்டதால் கோபப்படும் பறவைகள் தங்களை உண்டிக்கோலில் வைத்துக்கொண்டு எறியச் சொல்கின்றன. விளையாடுபவர் அதை இழுத்து அடித்தால் அவை சென்று பன்றிகளை தாக்குகின்றன. இதே கிண்டிலின் இணையக் கடையில் பெஸ்ட்செல்லராக இருப்பது, Steig Larsson எழுதிய The Girl with a Dragon Tatoo என்னும் புத்தகம். புரிகிறதா?

oo0000oo

கார்பரேட்டுகள் அறவழியில் நடக்கிறார்களா என்பது சம்பந்தமான ஒரு டிவி நிகழச்சியை ரசித்துப் பார்த்தேன். சாட்டிலைட் சானல் பட்டிமன்றம் போல் காச்மூச்சென்று கத்தாமல், மற்றவன் மனைவியைச் சண்டைக்கு இழுக்காமல் தலைப்புடன் ஒட்டிப் பேசினார்கள். என்னதான் கார்ப்பரேட் என்றாலும், லாபத்துக்கு மட்டுமே செயல்படும் ஸ்தாபனமாக இருந்தாலும், ethics என்பது அவர்களுக்கும் உண்டு. காரணம் தனி மனிதனைப்போல் இந்த சொசைட்டியில் அவர்களும் ஒர் அங்கம் என்பதால்.

லாபத்துக்கு ஓடும்போதும் காம்படிஷனுக்கு ஆட்படும்போதும் ஆங்காங்கே நெறி தவறுவது இப்போதெல்லாம் தப்பாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் corporate ethics என்பதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் Pixar Animation Studios. Wall-E என்னும் படம் எடுத்துக்கொண்டிருந்த நேரம் ட்ரைலர் ரிலிஸ் செய்துவிட்டார்கள் ஆனால் படத்தின் கதை விவாதத்தில் ஒரு தொய்வு ஏற்பட்டது. படத்தில் வேலை செய்யும் அனிமேட்டர்களை எப்படி inspire செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருந்தார்கள் Pixarகாரர்கள்.

கிட்டத்தட்ட அதே சமயம் கோர்ட்னி என்னும் ஒரு பெண், தினமும் Wall-E ட்ரைலரைப் பார்ப்பதாகவும் அதில் வரும் அந்தக் குட்டி ரோபோ அழும்போது தினமும் அழுவதாகவும் தன்னுடைய வலைப்பதிவில் எழுதியிருந்தார். தான் அழும் அந்த வீடியோவையும் யூ-ட்யூபில் போட்டிருந்தார். இதை எப்படியோ படித்த/பார்த்த Pixar டீம், தாங்கள் எடுக்கும் படங்கள் எப்படியெல்லாம் மனிதர்களைத் தொடுகின்றன என்று நினைத்தார்கள். தினமும் காலையில் அந்தப் பெண் அழும் வீடியோவைப் பார்த்தார்கள், இன்ஸ்பயர் ஆனார்கள். படம் வெளிவந்தது.

இந்தப் படம் வர மிகவும் உதவிய அவளையும் அவள் பாய் ப்ரண்டையும் விமானத்தில் கூட்டிவந்து, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்கவைத்து, படத்தின் டீமுடன் ஒரு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் (http://blog.moviefone.com/2008/07/02/pixar-honors-the-girl-who-cried-at-the-wall-e-teaser/ ). இத்தனையும் எந்தவித விளம்பரமும் இல்லாமல். அதற்குப்பின் அந்தப் பெண் அதைப் பற்றி வலைப்பதிவில் எழுதியவுடன்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

யாருக்கும் தெரியாதபோதும், எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி எதையாவது செய்வீர்களா? உங்கள் மானேஜர் லீவில் இருந்த அன்றும் எப்போதும்போல் வேலை செய்வீர்களா? ரொம்ப சிம்பிளாக, அதுதான் ethics.

oo0000oo

விடை: Wuthering Heights எழுதிய ப்ராண்ட்டி சகோதிரிகளில் ஒருவரான எமிலி ப்ராண்ட்டி (Emily Bronte). ப்ளாஷ்பேக்களின் முலமாக முன்பும் பின்புமாகச் சொல்லப்பட்ட பிரபல நாவல்.