‘புத்தகம்’ Posts

”குட்மார்னிங் ஸார்!”

மக்கின்ஸி அவனிடம் ஓரணா நாணயத்தை வீசி எறிந்தான்.

பொறுக்கிக்கொண்டு அடைப்பத்துடன் விலகினான். வெளியே, “துரை எழுந்துட்டாரு” கேட்டது. மூன்று வேலைக்காரர்கள் மெளன வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.

மக்கன்ஸி தன் உள்ளாடைகளில் நடந்து, அறையை விட்டு வெளியே வந்து, அருகே இருந்த குளியலறைக்குள் நுழைந்து, தன் உடைகளை கழற்றி எறிய, அவற்றை ஒரு கருப்பன் பிடித்துக் கொள்ள, மக்கன்ஸி இப்போது உரித்த கோழியைப் போல பிறந்த மேனியாக இருந்தான். வெள்ளை வெளேர் என்று உருவி விட்ட அம்புத்தனமான உடற்கட்டு. கொப்புளிக்கும் தசை நார்கள். திருகி விட்ட கயிறு போல, ஒரு அவுன்ஸ் ஊளைச்சதை இல்லாத ஆரோக்கியம்.

வேளையாட்களில் ஒருவன் மண்பானையிலிருந்து குளிர்ந்த நீரை ஆதரவுடன் ஊற்ற அவன் தன்னை தேய்த்துக்கொண்டு கைநீட்டும்முன் மற்றொரு கருப்புக்கை சோப்புடன் தயாராக இருந்தது. மக்கின்ஸி உற்சாகமாக பாடத் துவங்கினான்.

- கருப்பு சிவப்பு வெளுப்பு (அ) ரத்தம் ஒரே நிறம், ஆகஸ்ட் 1983.


January 31st, 2009

Rabbit runs away !!

John Updike

John Updike, a Lyrical Writer of the Middle-Class Man, Dies at 76. If you haven’t read Rabbit, Run yet, you should.


chokkan salman book

நேற்று இரண்டாம் முறை படித்து முடித்தேன்.

ஓரண்டுக்கு முன்பே, சொக்கன் எழுதியிருந்த சல்மான் ரஷ்டியின் கதையை[ஃபத்வா முதல் பத்மா வரை] படித்திருந்தாலும், மீண்டும் படிக்கத் தோன்றியதற்கு காரணங்கள் சில. ரொம்பவும் சில்லியானது, ரஷ்டியின் பிரிந்த தோழியான நம்மூர் பத்மாவின் Top Chef நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு முன் Bravo சானலில் பார்க்க நேரிட்டது. தலையில் அடித்துக் கொள்ளாத குறை. அதைவிட முக்கியமான காரணம் சமீபத்தில் படித்த ரஷ்டியின் லேட்டஸ்ட் நாவலான The Enchantress of Florence. மீண்டும் தலையில் அடித்துக் கொள்ளாத குறை.

ரஷ்டியின் தி முர்’ஸ் லாஸ்ட் ஸையை படித்தவர்கள், அவரின் சமீபத்திய நாவலை படித்து என்ன சொல்கிறார்கள் என்று அறிய எண்ணம். அவர் எழுதிய குழந்தைகள் கதையான, Haroun and The sea of stories போல அவரின் கதைக் கடலும் காணாமல் போனதாக தெரிகிறது. கொஞ்ச நாட்களுக்கு கதை எழுதுவதை விடுத்து, Imaginary Homelands போல பத்தி எழுதலாம்.

சொக்கன் எழுதிய பயோகிராபிகளில் அவர் சிறந்ததாக கருதுவது, சாப்ளின் கதையைத் தான். என்னைக் கேட்டால் இந்த புத்தகம் தான் என்பேன்.

ரஷ்டியை பத்து வருடங்களாக தொடர்ந்த அந்த ஃபத்வா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டமும் நடையுமாக தொடங்கும் இந்த புத்தகம் செல்வது சீரான வேகத்தில். ரஷ்டி அவரின் வாழ்க்கையை பற்றி முன்பே எழுதியிருந்தாலும், சொக்கன் காட்டும் ரஷ்டி கொஞ்சம் புதிதானவர். பம்பாயை காதலிக்கும் சாதாரண மனிதராக, காதல் மன்னனாக, தாய்நாட்டை விட்டு தொலைந்து போனவராக, போராளியாக.

நம் வாழ்க்கை மொத்தமும் கதைகளின் தொகுப்பு தான் என்னும் ரஷ்டியின் நாவல்கள் பிறந்த கதையை விவரமாக விவரிக்கிறார் சொக்கன். ஃப்த்வா நாட்களை பற்றி, புலம் பெயர்ந்ததால் பட்ட அவஸ்தையைப் பற்றி நடுநிலையாக சொல்கிறார்.

இரண்டு மணி நேரத்தில் படிக்கக் கூடிய இந்த புத்தகத்தை படித்தவுடன் வரும், ‘இந்த மாதிரி புக்ஸ் எல்லாம் ஈஸியாக எழுதாலாம் போல இருக்கே’ என்ற எண்ணம் தான் சொக்கனின் வெற்றி.

பி.கு – நெப்போலியனை பற்றி சொக்கன் எழுதிய போர்க்களப் புயல் புத்தகத்தை படிக்க வேண்டும். நெப்போலியன் எனக்கு ரொம்பவும் பிடித்த காரெக்டர். செந்திலும் நானும் 1998ல் The Waterloo என்று ஒரு திரைக்கதை ஆகக்கூடிய கதை செய்தோம். ”ஃப்ர்ஸ்ட் ஷாட்ட ஓப்பன் பண்ணா”, என்று வுட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் பல பேருக்கு கதையை வாயால் டால்பி ஸ்டீரியொவில் திரைப்படம் போட்டு காண்பித்தோம். இன்னமும் தயாரிப்பாளர் கிடைத்தபாடில்லை. நாங்களும் விடுவதாயில்லை. நெப்போலியனைப் போல.


ashokamitran_next_book.jpg
[ஆனந்த விகடன்]

நாளை[ஏப்ரல் 23] உலக புத்தக தினம். படிப்பதைப் பற்றி பின்பு யோசிக்கலாம், அட்லீஸ்ட் ஆளுக்கொரு புத்தகம் வாங்கலாம்.


journal of joyce carol oates

நள்ளிரவு வரை கண்முழித்து, அவ்வப்போது இரண்டு பக்கங்கள் தாவி, அரை டஜன் பாராக்களை எகிறி குதித்து, பத்துப் பதினோரு வரிகளை மென்று முழுங்கி, லைப்ரரியில் ஃபைன் கட்டி, போன வாரம் தான் ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸ்(Joyce Carol Oates அல்லது JCO) என்னும் அமெரிக்க எழுத்தாளினியின் 500 பக்க ஜர்னலை ஒருவழியாய் படித்து முடித்தேன்.

ஓட்ஸைப் பற்றி முன்னமே அவரது மென்மையான உள்ளர்த்தம் நிறைந்த சிறுகதைகள் மூலம் அறிந்திருந்தாலும், சமீபத்தில் படித்த High Lonesome என்னும் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் தான் மீண்டும் கண்டுகொண்டேன். இதில் 80களில் எழுதிய Golden Gloves என்னும் மிக நுட்பமான சிறுகதை ரொம்பவும் பிடித்துப் போனது.

1970களில் ஓட்ஸ் கனாடாவின் விண்ட்ஸ்ர் யுனிவர்சிடியில் ஒரு புரபஸராக பணியாற்றிக் கொண்டிருந்தார். முப்பதுகளில் இருந்த ஓட்ஸ் அப்பொழுதே எழுத்துலகில் மிகப் பிரபலம். 1971ல் ஒரு வருட sabbatical லீவில் இங்கிலாந்துக்கு சென்ற போது, தனிமைத் துயர் போக்க திடிரென்று எழுத(டைப்) செய்ய ஆரம்பித்த அவரது ஜர்னல் இன்று வரை எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. மொத்தமாய் 5000 பக்கங்கள். இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது 1973-82 வரை எழுதப்பட்டது மட்டுமே.

இந்த ஜர்னலின் புத்தக வடிவத்தில் காணக் கிடைப்பது, ஒரு சராசரி எழுத்தாளினியின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள். ஜர்னலை பிறகொரு காலத்தில் யாராவது படிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டெல்லாம் ஓட்ஸ் ரொம்பவும் மெனக்கெட்டு எதையும் எழுதவில்லை. தன் யூனிவர்சிடி வாழ்க்கை, தன் வீட்டின் பின் ஓடும் காட்டாறு, தன் கணவரான ரே ஸ்மித்தின் மீதான காதல், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டிய நாட்கள், எழுத்தாளர்களான ஜான் அப்டைக் போன்றவர்களுடனான நட்பு, கனவில் வரும் கதை மாந்தர்கள், நண்பர்கள், எதிரிகள், படித்த புத்தகங்கள், மிரட்டிய ஆசாமிகள், போரடித்த படங்கள் என்று ஒருவரின் தனிமனித வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள் தான். இதையெல்லாம் மீறி எழுத்தாளரான அவரது மனதில் நிகழும் creative process, பல கதைகள் எழுதிய விதமும், எழுதத் தூண்டிய தருணத்தையும் தன் நண்பருடன் பகிர்ந்து கொள்ளும் பாங்குடன், தனக்குத் தானே எழுதிக் கொண்ட ஜர்னல் தான் இப்புத்தகம்.

இம்மாதிரி ஜர்னல்களை படிப்பது, மற்றவர்களின் டைரியை படிப்பது போன்ற ஒருவித வாயரிசம் தான் என்றாலும், எழுத்தாளனின் மனதில் நிகழும், கதைகளில் வராத எண்ணங்களை வெளிப்படுத்துவதனால் படிக்க ரொம்பவே பிடித்திருந்தது.

தற்போது இண்டர்நெட்டில் பல எழுத்தாளர்களும் வலைப் பதிவுகளை ஜர்னல் ஸ்டைலில் எழுதுகிறார்கள். சிலர் free-form எனப்படும் ஒரு hybrid ஸ்டைலில். இவை இரண்டிலுமே சுவாரசிய அ-சுவாரசிய விஷயங்கள் இருக்கின்றன. தமிழிலும் வலைப்பதிகளில் எழுத்தாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பா.ராகவன் பேப்பர் எழுதுகிறார். சமீபத்தில் தன் உடல் எடையை குறைத்த விஷயத்தையும், தூர்தர்ஷன் நினைவுகளையும் எளிமையாய் சுவாரசியமாய் சொல்கிறார்.

ஜெயமோகன் படிக்கவே மூச்சு வாங்குகிற விஷயங்களை, கீபோர்டில் கீ போய் வெறும் போர்டு ஆகும் வரை எழுதுகிறார். இரண்டு நாள் படிக்காவிட்டால் ரெண்டு மெகாபைட் அளவுக்கு எழுதித் தள்ளிவிடுகிறார். அவ்வப்போது அங்கத முயற்சிகளில் ஈடுபட்டு நியூஸில் அடிபடுகிறார்.

அட்சரம் வலைப்பதிவு எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், சன் டிவியில், தினமும் ஒரு மணியாவது தமிழ் வலைப்பதிவுகளை படிப்பதாய் பேட்டியளக்கிறார். செய்தியோடை இல்லாத ஒரு வித வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறார்.

இன்னமும் பல தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிவுகள் எழுத வந்தாலும் படிக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். எதற்காக இவ்விதமான பதிவுகள் எழுத வேண்டும் என்று கேட்கிற எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். ஜாய்ஸ் கேரோல் ஓட்ஸின் தத்துவம் – The act of writing in a journal is the very antithesis of writing for others. The skeptic might object that the writer of a journal may be deliberately creating a journal-self, like a fictitious character, and while this might be true, for some, for a limited period of time, such a pose can’t be sustained for very long, and certainly not for years. It might be argued that, like our fingerprints and voice “prints,” our journal-selves are distinctly our own; try as we might, we can’t elude them; the person one is, is evident in every line; not a syllable can be falsified.