‘இந்தியா’ Posts

ஐபேடின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பித்து விட்டது. வழக்கம் போல் கருப்பு டீஷர்ட் போட்டுக் கொண்டு, மெடிக்கல் லீவில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து பேசிவிட்டு, பேனை பெருமாளாக்கி விட்டு போனார். ஆண்ட்ராயிடை கூகிள்காரர்கள் குடைந்து கொண்டு இருக்கிறார்கள். திறந்தவுடன் அவ்வப்போது மறித்துப் போகிறதாம். மைக்ரோசாப்ட்காரர்களும் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. இம்மாதிரியான பலகை கணினிக்களின் காலமிது.

ஊரு ரெண்டுபட்டால் என்று அமெசான்காரர்கள் எந்த ஆபரேடிங் ஸிஸ்டத்திற்கும் தன் கிண்டில் சாஃப்ட்வேரை ரெடி செய்து கொண்டு விடுகிறார்கள். ஐஓஎஸ்யிலும் ஆண்ட்ராயிடிலும் விண்டோஸிலும் ஓடுகிறது. அமெசானின் கிண்டில் இ-புத்தக படிப்பானிலும் இருக்கிறது. சமீபத்தில் இ-புத்தகங்களின் விற்பனை பேப்பர் புத்தகங்களை தாண்டி விட்டது என அறிவித்திருக்கிறார்கள்.

மின்புத்தகத்தில் இருக்கும் பாதகங்கள் சாதகங்களை மறைத்துவிடும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். போன வாரம் கிண்டிலில் ஆஸ்கர் வைல்டின் The Importance of Being Earnest என்ற குட்டி நாடகத்தை வாசித்தேன். மின் புத்தகங்கள் இம்மாதிரி நாவல்கள், நாடகங்கள் போன்ற இலக்கியங்கள் படிக்க உதவும் என்றே தோன்றுகிறது. முன்னும் பின்னும் அடிக்கடி திருப்பிப் பார்த்து படிக்கும் பாட புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிப்பதில் சிரம்ங்கள் இன்னமும் இருப்பதாக நினைக்கிறேன். யார் நினைத்தாலும்/விட்டாலும் பேப்பர் புத்தகத்திலிருந்து ஒரு இருபது வருடங்களிலாவது ஒரேடியாக மாறிவிடுவோம்.

0000

இந்திய சினிமாவிற்கு(உங்கள் துப்பாக்கியை கையிலெடுக்கவும்!) சென்ஸார் தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஹாலிவுட் போல ரேட்டிங் சிஸ்டம் உதவலாம். ஆனால் ஹாலிவுட்டிலேயே இதை மாற்றி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியவில் இயங்கும் சென்ஸார் வழக்கம் ஹாலிவுட்டிலிருந்தே வந்தது. ஆனால் அங்கேயோ 1968லேயே சென்ஸார் போய் ரேட்டிங் வந்து விட்டது. அதாவது முதலில் படத்தை பார்க்கிற எந்த கமிட்டியும் வறுத்த வேர்கடலையை கொறித்துக் கொண்டே நாயகியின் தொப்புளையோ, நாயகன் பேசும் நாராசமான வசனங்களையோ கட் செய்ய முடியாது. தேசத்தில் இருப்பவர்கள் எதை பார்க்க வேண்டும் எதை கேட்க வேண்டும் என்பதை இருட்டு ரூமில் முடிவெடுக்க முடியாது. ஒரு கலைஞன் தான் எடுக்க நினைப்பதை எடுப்பதற்கும் அதை மற்றவர்கள் காண்பதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் ரத்தம் இருக்கிறது, ஆறுபது கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன என படம் பார்த்து விட்டு ரேட்டிங் கொடுத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பார்க்க அனுமதிப்பதற்கு இந்த ரேட்டிங்கள் உதவியாய் இருக்கின்றன.

இதை இந்தியாவிலும் செய்யலாம். தியேட்டர்களில் கொஞ்சம் கெடுபிடியாய் R(Restricted) ரேட்டிங் உள்ள படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வந்தால் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பி விடலாம். அப்படி இல்லையென்றால் இன்னமும் பத்து வருடங்களிலாவது ரேட்டிங் சிஸ்டம் போய் வேறெதாவது வந்து விடும். நேரடியாய் அதற்கு தாவி விடலாம். சமீபத்தில் ஆரண்யகாண்டம் என்ற படத்தில் கமல் ரஜினியை பற்றி வரும் வசனங்களை கட் செய்ய பரிந்துரைத்திருக்கிறார்களாம். நல்ல தமாஷ்.

0000

வாழ்கையில் எல்லாவற்றையும் விளையாட்டாய் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். Four Square என்னும் இணையதளத்திற்கு உங்கள் போனின் முலமாக சென்றால், நீங்கள் தற்போது எங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை GPS மூலம் அறிந்து கொள்ளும். அடிக்கடி ஒரு பொது இடத்திற்கு, உதாரணமாக அசோக் நகர் சரவணபவன், சென்று வருகிறீர்கள் என்றால், எப்போதெல்லாம் அங்கே போகிறீர்களோ அப்போதெல்லாம் Four Square போய் வந்தால் அது கணக்கு வைத்துக் கொள்கிறது. இதே போல் எல்லோரும் செய்கிறார்கள். மற்றவர்களை விட நீங்களே அங்கே அதிகம் போகிறீர்கள் என்றால், உங்களை அசோக் நகர் சரவணபவனின் மேயராக, விளையாட்டாக, Four Square நியமிக்கிறது. ஃபேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடம் ஜெர்க் விட உபயோகமாக இருக்கும்.

இதேபோல் குழந்தைத்தனமாக இல்லாமல் உபயோகமாக வாழ்க்கையை விளையாட்டாக மாற்ற முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல உதாரணம் – அமெரிக்காவில் எல்லோர் வீட்டின் கரெண்டையும் கணக்கெடுத்து, அவர்களின் வீட்டின் அளவு, இருக்கும் எலக்ட்ரானிக் சாமான்கள், இருக்கும் இடம், தட்பவெப்பத்திற்கு ஏற்ப யார் குறைவாய் மின்சாரத்தை உபயோகிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து விளையாடுவது. அதையும் ஃபேஸ்புக்கில் பீற்றிக் கொள்ளலாம். நாடெங்கிலும் கரெண்டாவது மிச்சமாகும். இந்தியாவில் டிவி பார்ப்பதை கணக்கெடுக்கலாம்.

0000

ராபர்ட் ப்ராஸ்டின் கவிதைகளை ரொம்பவே பொறுமையாக படித்துக் கொண்டு வருகிறேன். இன்னமும் முடித்தபாடில்லை. ப்ராஸ்டின் Stopping By Woods on a Snowy Evening கவிதை நேருவினால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு க்ளீஷேவாகிவிட்டது. அதையும் தாண்டி ப்ராஸ்ட் மழையில் நனைந்தபடி, இரவில் நடந்தபடி, புல்லில் படுத்தபடி, ஆற்றில் கால் விட்டபடி கன்னாபின்னாவென்று நல்ல கவிதைகளை எழுதித் தள்ளி இருக்கிறார்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில் இருக்கிற அ-நேரடித்தன்மையை பாருங்கள். நெருப்பு மற்றும் பனிக்கட்டிகளுக்கு பதிலாக நீங்கள் எதை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இது பைபிளைப் பற்றியது என்றும் உலக ஷேமத்தை பற்றிய கவலை என்றும் ”இல்லை இல்லை, இதைத் தான் சொன்னார்” என்றும் இன்று வரை விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளனை/கவிஞனை படிக்கும் போது அவரின் எண்ணங்கள் சுலபமாக புரிகிற மாதிரி இருக்கும். ஒரேடியாக ப்ராஸ்ட் எழுதிய கவிதைகளை படிக்கும் போது எனக்கு இந்தக் கவிதை அவர் மனைவியின் மறைவைப் பற்றி பேசுவதாகவும் தோன்றுகிறது.

Fire and Ice – Robert Frost
Some say the world will end in fire,Some say in ice.
From what I’ve tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To know that for destruction ice
Is also great
And would suffice.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக எழுதிக் கொண்டிருக்கும் இந்த பத்தியை கொஞ்சம் இடைவெளிவிட்டு தொடர நினைத்திருக்கிறோம். மூன்று மாதங்கள் கழித்து தேர்தல், கிரிக்கெட், சுமாரான திரைப்படங்கள் மற்றும் நேரம் தொலைக்கும் இன்னபிற விஷயங்களை பேசலாம். இப்போதைக்கு பை.

- இன்ன பிற பத்தி – March 15, 2011


இந்த வருடம் டெக்னாலஜி பற்றி ஜல்லியடிக்க சில வார்த்தைகள்.

Cloud Computing (க்ளவுட் கம்ப்யூட்டிங்) – மேகக் கணினிச் சேவை என்று கூட அழகாகச் சொல்லலாம். ஆனால் ஐ.டி ஆட்கள் பயந்து போய் விடுவார்கள். கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ, இந்த கட்டுரையை இணையத்தில் படித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு முறையாவது டெக்னாலஜி மேகம் உங்கள் வாழ்வைத் தொட்டிருக்கிறது.

இந்த வருடம் நம்மை தொடப் போவது பர்சனல் க்ளவுட் எனப்படும் உங்களுக்கே உங்களுக்கான ஒரு தனி மேகம். அதாவது உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருக்கக்கூடிய பல வகையான புகைப்படங்கள், விடியோ மற்றும் அனைத்து பைல்களையும் இணையத்தில் சேமித்து வைக்கிற சேவை. இப்படி ஸ்டோர் செய்வதினால் வரும் வருடங்களில் நீங்கள் உங்கள் கணினியை பேக்-அப் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பது முதல் நல்ல விஷயம். ஆக நீங்கள் எடுக்கிற ஆயிரமாயிரம் போட்டோக்களை உங்களுக்காக அவர்களின் டேட்டாசெண்டரில் சேமித்து வைக்கப் போகிறார்கள் க்ளவுட் கம்ப்யூட்டிங் கம்பெனிகள்.
இதற்காக பிரத்யேகமான மென்பொருள்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வருகைக்குப் பிறகு, கணினிகள் டம்ப் டெர்மினல்களாகக்கூடும் (dumb terminal). அதாவது இணையத்துக்கு உங்களை கனெக்ட் செய்யும் உலாவி மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இயந்திரம். மற்றபடி நீங்கள் எக்ஸலில் வேலை செய்வதோ, படம் பார்ப்பதோ, பேக்-மேன் விளையாடுவதோ எல்லாமே இணையத்தில் தான். இதற்காக முப்பெரும் டெக்-தேவர்களான மைக்ரோசாஃப்ட், கூகிள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. உங்களை, கணினியை விட்டுவைக்க மாட்டார்கள். தயாராகுங்கள்.

Augmented Reality (ஆக்மெண்டட் ரியாலிடி) – டெக்னாலஜியில் வேலை பார்க்கும் ஐந்து பேரை இப்படி என்றால் என்ன என்று கேட்டால் ஆறு விதமாய் பதில் சொல்வார்கள். ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், க்ராபிக்ஸை நம் வாழ்வில் கலக்கும் ஒரு பெருந்திட்டம் தான் ஆக்.ரியாலிடி. டெர்மினேட்டர். …ஏன் நம் எந்திரனில் கூட ரோபோவின் கண்கள் மூலம் பார்க்கும் போது அது பார்க்கும் ஆளின் எடை, பெயர் விலாச விவரங்கள் தெரிகிற ஸீன் ஞாபகம் இருக்கிறதா? அதே போல் உங்களாலும் செய்ய முடியும், கூடிய சீக்கிரம். அதாவது நம் நிஜ வாழ்வில் க்ராபிக்ஸையும், அதன் சத்தங்களையும் வாசனைகளையும் சூப்பர் இம்போஸ் செய்யப் போகிறார்கள்.

2009 TED எனப்படும் விஞ்ஞானக் கருத்தரங்கில் ப்ரணவ் மிஸ்திரி செய்து காண்பித்த வித்தைதான் இந்த இயலைத் தொடங்கி வைத்தது. உங்களிடம் ஐ-போன் இருந்தால், அதிலுள்ள ஒரு அப்ளிகேஷனின் மூலம், நீங்களும் இந்த AR விளையாட்டை விளையாடலாம். அதாவது உங்களின் செல்போனை ஓப்பன் செய்து எதாவது ஒரு பில்டிங்கை நோக்கி காட்டினால், இந்த அப்ளிகேஷன், அந்த கட்டிடத்திலுள்ள கம்பெனிகள் எவை, எந்த மாடியில் மதிய உணவு கிடைக்கலாம், எந்த மாடியில் புகைக்கலாம் என்றெல்லாம் சொல்லிவிடும். அல்லது உங்கள் போனை ஒரு ரோடை நோக்கிக் காண்பித்தால், உங்கள் நண்பர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று வரைபடத்தில் காண்பித்து விடும். இதெல்லாம் ஆரம்பம் தான், ப்ரணவ் காண்பித்த விஷயங்கள் வந்து விட்டால், கணினி என்பதே தேவைப்படாது போலிருக்கிறது. மைக்ரோசாப்டின் Aug. Reality விளம்பரம்.

இவை தவிர HTML5, வெப்ஸ்டோர், Quora, கூகிளின் சோஷியல் நெட்வொர்க், விண்டோஸ் டேப்லட், இணையத்துக்கும் டிவிக்கும் திருமணம், Net Neutrality, 3டி டிவி, clean tech, மின் புத்தகங்கள் படிப்பான் போன்றவைகளை கேள்விப்பட்டிருந்தால் இணையத்தில் ஜல்லியடிக்கலாம். டுவிட்டர்-பேஸ்புக் தெரிந்திருந்தால் போதும். ஒரு பத்து பேராவது உங்களை தொடரவேண்டியது அவசியம். குட்லக்.

0000

நேரத்திற்கு நேரமாகிவிட்டது. இது புத்தகச் சந்தையில் வரப் போகும் புத்தகமல்ல, கைக்-கடிகாரத்தின் நேரம் முடிந்து விட்டது. அதாவது இந்தக் கால இளைஞர்களிடம் மணிக்கட்டை காட்டி என்ன என்று வினவினால் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கைக் கடிகாரங்கள் இல்லாத கரங்கள் அவை. இவர்கள் அலாரம் வைப்பதோ ஐ-போன் time app-ல் தான்.

கடிகாரம் கட்டுவது என்பது இக்காலத்தில் அழகிற்காகத்தான். யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி கணினி, செல்போன் என்று நேரம் காட்டுகிற விஷயங்கள் பல வந்து விட்டன, ஆகையால் கைக்-கடிகாரம் கட்டுவது குறைந்து போய்விட்டது என்கிறார்கள். கடிகாரக் கடைகள் இனிமேல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றன.

என் முதல் கைக்கடிகாரம், ஐந்தாம் வகுப்பின்போது அத்தைமார்கள் வாங்கிக் கொடுத்தது. அதைப் போட்டுக்கொண்டதாக ஞாபகம் இல்லை. எங்கே போயிற்று என்றும் தெரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பின்போதுதான், நானாக விரும்பி கடிகாரம் கட்டியது. Allwyn கம்பெனியின் Trendy ப்ராண்ட் கைக்கடிகாரங்கள். அவற்றின் டி.வி விளம்பரங்களில் மயங்கிப்போய் வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அந்த விளம்பரங்களின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று. அந்த நீல வாட்சுக்கு அ-மேச்சிங்காக வெள்ளை ஸ்ட்ராப் போட்டிருந்தேன். பிறகு சிவப்பிற்கு மாறி வீட்டினரைத் திகைக்க வைத்தேன். அது நின்று போனபின் ஒன்றிரண்டு டைட்டன் வாங்கியிருக்கிறேன். ஏழு வருடங்களுக்குமுன் கைக்கடிகாரத்தை கட்டுவதை நிறுத்தி விட்டேன். யாராவது ரொம்பவும் சொன்னால் ஒழிய அவற்றை தொடுவதில்லை. என் கைக்கடிகாரத் தேவை நின்று போய் நாளாகி விட்டது.

டைட்டன் கடை ஃப்ரான்சைஸ் எடுக்க நினைத்திருந்தால் கொஞ்ச ’நேரம்’ யோசியுங்கள், உங்கள் செல்போனில் மணி பார்த்தபடி.

0000

இந்த வாரம் சென்னை புத்தகச் சந்தை ஆரம்பிக்கிறது. நண்பர் வெங்கட் இதன் பொருட்டு வரும் அத்தனை செய்திகளையும், வலைப்பதிவுகளையும், புத்தக விலைப்பட்டியல்களையும் இங்கே சேமித்துக் கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் ஒரு லுக் விடலாம்.

கல்லூரி படிக்கும்போது, புத்தகச் சந்தைக்குச் சென்று பனியன் கழட்டாத குறையாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். கொஞ்ச வருடங்களுக்குப் பின் படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்கள் என்னிடம் அதிகமாகி விட்டன. அதன் பின் கண்டிப்பாய் படிக்க போகிறேன் என்று எண்ணும் புத்தகங்களை மட்டும்தான் வாங்குகிறேன். படித்ததும் சிலவற்றைக் கொடுத்து விடுகிறேன்.

புத்தகச் சந்தையில் செய்யப்படும் impulse buy ரொம்பவும் அதிகம். சும்மா அட்டைப்படம் பார்த்தே மயங்கிப்போய் வாங்குபவர் என்றால், முதல் நாள் போய் அட்டைப் படங்களை பொம்மை பாருங்கள், அடுத்த நாள் செல்லும் போது நினைவிருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்குங்கள். அல்லது இணையத்தில் கொஞ்சம் உலாவி எந்தெந்த புத்தகங்கள் எப்படி என்று பார்த்து விட்டு பிறகு வாங்கிப் படியுங்கள். திடீரென்று எல்லா புத்தகங்களையும் வாங்குவது யாருக்கும் உதவாது. பதிப்பாளருக்கு இந்த வருடம் வருமானமாய் தோன்றலாம், ஆனால் அடுத்த வருடம் நீங்கள் சந்தைப் பக்கமே போக மாட்டீர்கள்.

மற்றபடி முக்கியமாய் – வீட்டிலுள்ள குழந்தைகளை கண்டிப்பாய் கூட்டிச் செல்லுங்கள். அவர்களுக்கு இதைவிடப் பெரிய உபகாரம் வேறொன்றுமில்லை.

- இன்னபிற பத்தி.


வழக்கம் போல் – ’இந்த வருடத்தின் சிறந்த’ சேர்த்துக் கொள்ளவும்

புத்தகம்

ஆங்கிலப் புத்தகம் 1 – The Big Switch – Nicholas Carr

ஆங்கிலப் புத்தகம் 2 – At Home: A Short History of Private Life – Bill Bryson

சொந்தக் கதை – Autobiography of Mark Twain – நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு நான்-லீனியர் முயற்சி

நோட்டபிள் புத்தகம் – இன்றைய காந்தி – ஜெயமோகன்

தமிழ் சினிமா

ட்ரைலர் – வா. கு. கட்டிங்

படம் – ஆயிரத்தில் ஒருவன்

நோட்டபிள் படம் – அங்காடித் தெரு

சுமார்ப் படம் – சிங்கம், ராவணன், மதராஸப்பட்டிணம்

காமெடிப் படம் – தமிழ்ப் படம்

ஸ்டண்ட் – நான் மகான் அல்ல

நாயகன் – கார்த்தி(ஆயிரத்தில் ஒருவன்)

நாயகி – அஞ்சலி (அங்காடித் தெரு)

காமெடியன் – சந்தானம் (பாஸ் எ பாஸ்கரன்)

துணை நடிகர் – பார்த்திபன்

பாடல் – ஓ ஈசா(ஆயிரத்தில் ஒருவன்)

படமாக்கப்பட்ட பாடல் – மன்னிப்பாயா

குத்துப் பாடல் – காதல் வந்தாலே(சிங்கம்)

இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்

பாடகர் – விஜய் யேசுதாஸ் ( தாய் தின்ற மண்ணே)

பாடகி – ஆண்ட்ரியா, ஷ்ரேயா கோஷல்(மன்னிப்பாயா)

பாடல் வரிகள் – வைரமுத்து ( கயல் விளையாடும் வயல்வெளித் தேடி)

நோட்டபிள் பாடல் – ஆரோமலே – அல்போன்ஸ் ஜோசப், கைதப்ராம் நம்பூதிரி, ரஹ்மான்

எடிட்டிங் – ஆண்டனி(வி.தா.வ, வா.கு.க)

ஒளிப்பதிவு – ராம்ஜி(ஆயிரத்தில் ஒருவன்), சந்தோஷ் சிவன் – மணிகண்டன் (ராவணன்)

எழுத்து/இயக்கம் – செல்வராகவன்

நோட்டபிள் இயக்குநர் – சுசீந்திரன் (நான் மகான் அல்ல)

பாலிவுட் சினிமா

படம் – Ishqiya

சுமார்ப் படம் – Karthik calling Karthik

நோட்டபிள் படம் – Peepli [Live]

ஹாலிவுட் சினிமா

படம் – Inception (கனவுத் தொழிற்சாலை)

காமெடிப் படம் – Date Night

சுமார்ப் படம் – - Shutter Island

மற்றவை

டெக்னாலஜி – Augmented Reality

மொக்கை விளையாட்டு – Farmville

மறதி நியூஸ் – மத்திய அரசு பட்ஜெட், செந்தமிழ் மாநாடு


ரத்த சரித்திரத்தின் முதல் பகுதியை இந்தியில் பார்த்தேன். இம்மாதிரி கேங்ஸ்டர் படங்களில் திடீரென்று யார் யாரை சுடுகிறார்கள், கூறு போடுகிறார்கள், வெட்டிச் சாய்கிறார்கள் என்று புரிவதற்கு முன் இடைவேளை வந்து விடும். இதில் சின்ன மாற்றம் , படம் முடிந்தே போய் விடுகிறது. மார்ட்டின் ஸ்கார்ஸஸி இத்தகைய படங்களில் பேச்சின் மூலம் கதையை நகர்த்தி, பயமுறுத்தி, டக்கென்று கொன்று விடுவார்கள். இதில் நேரெதிர்.

சுவாரசியமாய் ஒன்றுமேயில்லை. ரத்தத்தை பார்த்து விட்டு தூங்கப் போக முடியாது என்பதால் வீடு வந்து ஒரு நூறு பக்கம் படித்து விட்டே தூங்கப் போனேன். அடுத்த பகுதியில் சூர்யா வருகிறார் என்று டைட்டிலுக்கு முன் ட்ரைலர் போட்டார்கள். பார்க்கலாம். ரத்தக் களறி சண்டைக்கு நடுவே நாகேந்திரஹாராய என்று உமாச்சி பாட்டை எல்லாம் போடுவது ரொம்பவும் மெல்லிழைவாக மனித மனங்களில் வன்முறையை நியாயப்படுத்தும் என்பதை இயக்குநர் அறிவாரா?

0000

பாவை பிரபந்தங்கள் பாடும் மாதமிது. சென்னை வெள்ளாளத் தெருவில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் வசித்தவன் என்பதால் மார்கழியில் திருப்பாவை சொல்லச் செல்லும் அம்மாவுடன் கோவிலுக்கு போன ஞாபகங்கள் இன்னமும் மிச்சமிருக்கின்றன. திருப்பாவை என்பதை விட சுடச்சுட வெண்பொங்கல் வாசனை தான் என்னை ஈர்த்தது என்று சொல்ல வேண்டும். கோவிலுக்கு போகாத நாட்களில், அம்மா தொன்னையில் வெண் அல்லது சக்கரைப் பொங்கலோ வாங்கி வருவாள். மட மடவென எழுந்து பல் தேய்க்கிற மாதிரி தேய்த்து, கிச்சனில் நுழைந்து ஒரே அமுக்.

பத்தாவது படிக்கும் போது நண்பனின் காதலை ஆதரிக்க ஒரு குழாமாக போன போது தான் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தினப்படி விஷயமானது. சுபா என்கிற அந்தப் பெண் ஆஞ்சநேயரை சுற்றும் போது எண்ணைக் கையால் அருகில் இருந்த சுவற்றில் ஒரு புள்ளி வைக்க, சுரேஷ் என்கிற என் நண்பன் அடுத்த புள்ளி வைக்க, தினமும் 108 புள்ளிகள் முடிய நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தோம். இதற்கு நடுவில் யாரோ ஒரு சிறுவன் வந்து அவன் ஹால் டிக்கெட் நம்பரை எழுதி விட்டு போவான். இப்படியே எண்களாலும் கோடுகளாலும் சூழப்பட்டிருந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெயையும் தாண்டி மூச்சடைத்துப் போயிருக்கும்.

சட்டென்று ஒரு டைவர்ஷன். திருப்பாவை எப்படி மனப்பாடம் ஆகிற்று என்று இன்னமும் தெரியவில்லை. காலை சமையல் செய்து கொண்டே கிச்சனில் இருந்து பாடும் அம்மாவும் காரணமாய் இருந்திருக்கலாம். ஆடி மாத லவுட்ஸ்பீக்கரில் இருந்து தாயே கருமாரி என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடியதும், எங்கள் வீட்டு மர்ஃபி டேப்ரிக்கார்டரில் இருந்து வந்த பெங்களூர் ரமணி அம்மாளின் கணீர் குரலும் மனனம் ஆயின. நானாகவே ரொம்பவும் விரும்பிக் கேட்ட டிவோஷனல் பாடல்களை பாடியது ஒன்று எம்.எஸ் அல்லது பித்துக்குளி முருகதாஸ். வீட்டில் அடிக்கடி ஒலிக்கும் டி.எம்.எஸ்ஸின் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல்களும், நாகூர் ஹனிஃபாவின் இறைவனிடம் கையேந்தும் குரலும் பின்னர் பிடித்துப் போயின.

பள்ளியில் படிக்கும் காலத்தில், தினத்தந்தியில் அன்றைய திருப்பவையையும் திருவெம்பாவையையும், ஐந்து வரி தெளிவுரையோடு ஒரு கட்டம் கட்டி போடுவார்கள். திருப்பாவை அறிந்திருந்ததால் திருவெம்பாவையை திரும்பத் திரும்பப் படித்தேன். எம்பாவாய் வார்த்தையை காப்பியடித்தது ஆண்டாளா மாணிக்க வாசகரா என்று சந்தேகத்தோடு உலாத்தியதுண்டு. ஆண்/பெண் வித்தியாசங்கள் இருந்தும், திருவெம்பாவையின் பத்தொன்பதாம் பாடலில் தான் இரண்டிற்கும் ஒற்றுமை தெரிந்தன. இப்போது படித்தாலும், அந்த ஒற்றுமைகள் வாழ்கின்றன. இது திருப்பாவையா, திருவெம்பாவையா என்று தெரியாமல் படித்தால், கண்டிப்பாய் குழம்பிப் போவீர்கள்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

0000

வாரப் பத்திரிக்கைகளில் Most read/emailed என்று செக்‌ஷன்கள் வைத்துப் பார்த்தால் டாப் டென்னில் வருவது எவை என்பதை யோசித்துப் பார்க்கலாம்.

1. இந்த வாரம் எப்படி?
2. எதாவது ஒரு பெயர்ச்சிப் பலன்.
3. கோலிவுட் ரவுண்ட்-அப்
4. _____ நடிகருக்கு பிறந்த குழந்தைப் படங்கள்
5. ______ நடிகை திரும்ப நடிக்க வரும் முன்னர் வரும் மணியோசை
6. எதாவது ஒரு கருத்துக் கணிப்பு

இப்படியாக முக்கிய செய்திகளில் முக்கியமாக இருப்பது ஜோசிய ஹேஷ்யங்கள். வருடத்தின் முதல் வாரத்தில் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று மாத வாரியாக எழுதும் ஜோசியர்கள், வார ஜோசியம் எழுதும் பொழுது வருட முதலில் எழுதியதை ரெஃபர் செய்து எழுதுகிறார்களா? இப்படி சமீபத்தில் தேடிப் பார்த்த பொழுது, அக்டோபர் மாதத்தில் அமேசிங் வைபவம் ஒன்றும் வேலை சார்ந்த கவலை ஒன்றும் வரலாம் என்று எழுதியிருந்தார் ஒரு ஜோதிடர். அக்டோபர் மாதத்தில் வார வாரம் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துப் பார்த்த பொழுது இரண்டுக்கும் ஆறல்ல அறுபது வித்தியாசங்கள் தெரிந்தன. இம்மாதிரி ஜோசியங்கள் ஒருவேளை வானிலை மாதிரி மாறிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது.

இவை எதனால், எவரால், எப்படி எழுதப்படுகின்றன என்பதை எல்லோரும் அறிவோம். ஆனாலும் எல்லோரும் வருங்காலத்தை எட்டிப் பார்க்கிற ஆர்வத்தில் இருக்கிறோம் என்பது தான் மனித இயல்பாய் இருக்கிறது. இந்த பத்திரிகையிலும் இப்படியெல்லாம் போட்டால் pageviews பிய்த்துக் கொண்டு பறக்கும் என்பதால், ஆசிரியரை இவற்றை பரிசீலிக்குமாறு மெயிலனுப்பியிருக்கிறேன். நீங்களும் பரிந்துரைக்கலாம்.

0000

சமீபத்தில் ஜூலியன் அசாஞ்ச் பற்றி நாராயணன் எழுதியிருந்த கட்டுரை மிகையாக அவரை ஒரு ஹீரோவாக மட்டுமே காட்டி இருப்பதாய் எனக்கு தோன்றினாலும், கட்டுரைக்குப் பின் இருந்த கடின உழைப்பு தெரிந்தது. பிடித்திருந்தது. ரெண்டு நாள் பேப்பர் படிக்காமல் போனால் இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயம் நடக்கும் நாட்களில் நாமிருக்கிறோம். அப்படியிருக்க இந்த மாதிரி சுருக்கமான ஆனால் தெளிவான விவரிப்புகள் ரொம்பவும் முக்கியம். இவைகளை எழுத ஆள் அதிகமில்லை.

இந்த மாதிரி ஒரு 1000 வார்த்தை கட்டுரை எழுத அவர் குறைந்தது ஆறிலிருந்து பத்து மணிநேரம் வெறும் படிக்க மட்டுமே செலவழித்திருக்கலாம். இதற்கு பிறகு படித்ததில் இருந்து விவரங்களை தவிர்த்து கருத்துக் கூறுகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன் முழி பிதுங்கி விட்டிருக்கும்.

இம்மாதிரி கட்டுரைகளை முதலில் படிக்கவும், பிடித்திருந்தால் ஓரிரு வார்த்தைகளில் ஒரு மெயிலோ/கமெண்டோ அனுப்பலாம், தப்பில்லை.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.


போன வாரம் நடந்த நிகழ்ச்சிகள் சில –

1. இன்ன இன்ன மத்திய மந்திரி இன்ன இன்ன ஊழலில் லஞ்சம் வாங்கிவிட்டதாகச் சொன்னார்கள்.
2. இன்ன இன்ன எதிர்க்கட்சி போர்க்கொடி தூக்க, இன்ன இன்ன பிரதமர் பேசாமடந்தையாய் இருந்தார்.
3. இரண்டொரு நாளில் தொல்லை தாங்க முடியாமல் இ.இ மந்திரி ராஜினாமா செய்தார்.
4. இன்ன இன்ன எதிர்க்கட்சி இந்த நியாயம் கிடைத்ததற்கு தான் தான் காரணம் என்றது.
5. இந்தக் கணத்தில் இதில் சம்பந்தபட்ட இன்ன இன்ன லாபியிஸ்ட் ஒருவருடன் பலர் பேசிய தொலைப்பேசி உரையாடல்கள் இன்ன இன்ன பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.
6. இந்த இ.இ உரையாடல்கள் இ.இ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
7. வேலை நேரத்தில் தத்தம் திரைகளில் ஃபேஸ்புக்கில் வம்பிக் கொண்டிருந்த இ.இ குடிமகனுக்கு பல நண்பர்கள் இந்த உரையாடல் லிங்க்கை அனுப்பி வைத்தார்கள்.
8. இந்த இ.இ. உரையாடலை கேட்டு கொதித்துப் போன அவன் தன் பல நண்பர்களுக்கும் அதை அனுப்பி வைத்தான்.
9. அவர்களும் வேலையை விட்டுவிட்டு இதைக் கேட்க ஆரம்பித்தார்கள்.
10. உரையாடலில் பேசியது இ.இ தொலைக்காட்சி நிரூபினியா இல்லையா என்று # போட்டு டுவிட்ட ஆரம்பித்தார்கள்.
11. அது சம்பந்தமாக சில வலைபதிவுகள் உருவாக்கப்பட்டன. பல எதிர்வினைகள் எழுதப்பட்டு இணைய பாண்ட்வித்தை அடைத்துக் கொண்டன.

இந்த வார நிகழ்ச்சி நிரல்-

1. இ.இ குடிமகன் இ.இ தேதியில் வெளியாகப் போகும் இ.இ. ஸ்டாரோ, நாயகனோ நடித்த புதுப் படத்தின் ட்ரைலர் பார்க்க ஆரம்பிப்பான்.
2. இ.இ நண்பர்களுக்கு அந்த லிங்கை அனுப்புவான்.
3. இ.இ நண்பர்களும் அதைப் பற்றி டுவிட்ட ஆரம்பிக்க, இ.இ அரசியல்வாதி பழைய படி ஆரம்பித்துவிடுவார்.
4. இ.இ நிரூபினி பிரபலமாகி இ.இ சபாவிற்கு பரிந்துரை செய்யப்படுவார்.
5. இ.இ நண்பர்கள் குழாம் இந்தப் பரிந்துரையை ஆதரித்துக் கொண்டிருப்பார்கள்.
6. இ.இ நாட்டில் எல்லாம் ஷேமமாயிருக்கும்.

இன்ன இன்ன என்றிருக்கும் இடத்தில் பெயர் மாறிக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றும் புதிதாய் நடப்பதில்லை. அஷ்டே!

0000

ஞான ராஜசேகரனின் பாரதி படத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப்படம் கண்டிப்பாக வியாபார நோக்கங்களை மீறியது. பிரமாதமாக எடுக்கப்பட்ட இந்தியப் படம். இதை இந்திய மொழிகளில் டப்…வேண்டாம் சப்-டைட்டிலாவது செய்து ஸ்டார், சோனி சானல்களில் ஒரு சனிக்கிழமை மதியம் ஒளிபரப்பலாம். நமக்கும் இம்மாதிரி ஆத்தெண்டிக்காக பீரியட் படமெடுக்க முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஷாயாஜியில் ஆரம்பித்து தேவயானி, பாரதி மணி, நிழல்கள் ரவி என சின்ன சின்னச் ரோல்களில் கூட அழுத்தமான திறமை. இளையராஜாவின் மயக்கும் வயலின்கள், பி.கிருஷ்ணமூர்த்தியின் நேர்த்தியான கலை, வி.டி. விஜயனின் எடிட்டிங், ஞா.ரா.சேகரனின் இயக்கம் என பல நல்ல விஷயங்கள். இவையெல்லாம் தாண்டி பாரதி என்னும் புரட்சியாளனின் உண்மைக் கதை.

பாரதியின் சம்பவங்கள் நிறைந்த பயோகிராபியில் ஏகப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகள். காதலை பற்றிக் பேசிக் கொண்டிருக்கும் கொஞ்சம் நெகிழ்வான காட்சியில் திடீரென பாரதி அதிர்ந்து சொல்லும், ஆதலினால் காதல் செய்வீர் போன்ற வரிகளில் தமிழ் விளையாடுகிறது.

நான் பள்ளியில் படிக்கும் போது பிலிம் ஷோ என்று சிறந்த படங்களின் ரீல்களை வாங்கி வந்து லைப்ரரி தரையில் உட்கார வைத்து புரஜக்டரில் படம் காட்டுவார்கள். இப்பொழுதெல்லாம் இப்படி உண்டா என்று தெரியவில்லை. எல்லா பள்ளிகளிலும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த மாதிரிப் படங்களை வருடங்களுக்கு ஒரு முறையாவது பிலிம் ஷோ போல போட்டுக் காட்ட வேண்டும் என்று
சட்டம் வர வேண்டும்.

பாரதி இன்னும் பார்க்கவில்லையென்றால் பரவாயில்லை, இந்த வருட டிசம்பர் 11க்குள்ளாவது பார்த்துவிடுங்கள். அமேஸிங் அனுபவம்.

– இது சமீபத்தில் தமிழ் பேப்பரில் வெளியான இன்னபிற பத்தி.